Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்ஸ் அரச அதிபர் – சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் சந்திப்பு

பிரான்ஸ் அரச அதிபர் – சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் சந்திப்பு

பிரான்ஸின் சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் Didier Raoult அவர்களை அரசுத்தலைவர் மக்ரோன் இன்று மாலை திடீரென நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

பேராசிரியரின் பணியிடமான மார்ஸெயில் (Marseille) உள்ள தொற்றுநோய் ஆய்வு நிலையத்துக்கு (Fondation Méditerranée Infection – IHU), நேரடியாகச் சென்ற மக்ரோன் அங்கு அவரைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.

அதிபர் மக்ரோன் இன்று முன்னதாக பாரிஸ் வல்-து-மானில் (Val-de-Marne) உள்ள Kremlin-Bicêtre மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

கோவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை நோயாளர்களில் நேரடியாகப் பரிசோதிக்கும் மருத்துவ ஆய்வுகள் இந்தப் பல்கலைக்கழக போதனா மருத்துவமனை யில் நடைபெற்றுவருகின்றன.

இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் பேராசிரியர் Didier Raoult அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார். இது ஒர் அரசு முறைப் பயணம் அல்ல என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகை மிரட்டும் கொரோனோ வைரஸ் தொற்றைத் தடுக்க குளோரோகுயின் மருந்தை தன்னிச்சையாக- மருத்துவ நெறிமுறைகளை மீறி- தனது நோயாளர்களில் சோதித்து அவர்களைக் குணப்படுத்தி மாற்று மருந்தாக அதனை முதன்முதலில் நிரூபித்துக்காட்டியவர் Didier Raoult.

உலகப் புகழ் பெற்ற தொற்றுநோயியல் நிபுணரான இவரது பரிசோதனை உலக அளவில் மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆனால் சுமார் 70 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மலேரியா தடுப்பு மருந்தான குளோரோகுயினை அதன் பக்கவிளைவுகளைக் கருத்தில் கொண்டு கொரோனாவுக்கான சிகிச்சைக்கு அனுமதிக்க பிரெஞ்சு சுகாதார அமைச்சு மறுப்புத் தெரிவித்தது. .இந்த மருந்துப் பாவனை குறித்து ஜரோப்பிய மட்டத்தில் விரிவான பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே இதுவிடயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு சிபாரிசு செய்தனர்.

முறைப்படியான மருந்து ஒன்று கண்டறியப்படும் வரை, வைரஸ் பரம்பலால் நாளாந்தம் செத்து மடிவோரின் எண்ணிக்கையை குளோரோகுயின் மூலம் ஓரளவுக்கேனும் குறைக்க முடியும் என்று மருத்துவர் Raoult தொடர்ந்து வாதாடிவந்தார்.

இறுதியில் அவரது ஆலோசனைப்படி குளோரோகுயின் மருந்து வகைகளை ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் கண்காணிப்புடன் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதன் மீதான பரீட்சார்த்த சோதனைகள் இன்னும் நீடிக்கின்றன.

குளோரோகுயின் சிகிச்சை தொடர்பாக இன்னமும் சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில் மருத்துவர் Raoult அவர்களை மக்ரோன் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *