Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / இயற்கையின் விருப்பம் இது தான் போலும் …!

இயற்கையின் விருப்பம் இது தான் போலும் …!

வெளியே வர மனிதர்கள் அவசரப்பட்டாலும் இந்த நிலைமை இப்படியே தொடரவேண்டும் என்பது தான் இயற்கையின் விருப்பம் போலும்..

ஆட்கள் இல்லாத அமைதிச் சூழலை அதி உச்சமாக அனுபவிக்கின்றன இந்தப் பூநாரைக் கூட்டங்கள்(flamingos). இடம் பிரான்ஸின் Pont de Gau பறவைகள் சரணாலயம். பிரான்ஸின் தெற்கு மெடிற்றேனியன் கடற்கரையோரம் கழிமுகத்தை அண்டி அமைந்திருக்கிறது கமார்க்கு(Carmargue) சதுப்பு நிலம். பரந்த பிரதேசத்தை உள்ளடக்கிய இந்த ஈர நிலப்பகுதியில்தான் உல்லாசப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் இயற்கை சரணாலயம் (Parc ornithologique du Pont de Gau) உள்ளது.

யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் இந்த சரணாலயம் ஈஸ்டர் போன்ற விடுமுறைக் காலங்களில் உல்லாசப்பயணிகளால் நிறைந்து காணப்படும்.ஆனால் கடந்த மார்ச் 15 ஆம் திகதிக்குப் பின்னர் இங்கு ஆள் நடமாட்டங்கள் அறவே இல்லை. இந்த அமைதிச் சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் பறவைகள் குறிப்பாக பூநாரைகள் சரணாலயத்தை நிறைத்திருக்கின்றன. சுமார் 60 ஹெக்டயர் பரப்பில் பறவைகளைக் காணமுடிகிறது.

வழமையாக இங்கு ஆயிரத்து 500 பறவைகளைக் கணக்கெடுப்போம். இப்போது அது 2ஆயிரத்து 500 என்ற கணக்கில் எகிறியுள்ளது என்கின்றனர் அங்குள்ள நிர்வாகிகள். காலிலும் கழுத்திலும் செந்நிறம் கொண்ட பூநாரைகள் கூட்டமாக வலசை போகும் காட்சி கண்கொள்ளாதது. பொதுவாக அமைதியான சூழலை விரும்பும் இவை பெருமளவில் இனப்பெருக்கம் செய்ய தற்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

“ஆண்டுக்கு ஒரு முட்டையையே அடைகாக்கும் பூநாரைகள் அச்சமில்லாத, அமைதிச் சூழலில்தான் துணையை நாடி இனப்பெருக்கம் செய்யவிரும்புகின்றன. இது அதற்கான காலம். இந்தக்காலம் மிக விரைவில் முடிந்து விடக் கூடாது” இவ்வாறு விரும்புகின்றனர் சரணாலயத்தின் நிர்வாகிகள்.

பூநாரைகளுடன் கொக்குகள், மீன் கொத்திகள் போன்ற வேறு பல பறவை இனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. ஆபத்தான சில பறவைகளும்கூட அங்கு தென்படுகின்றன. இத் தகவல்களை பிராந்தியப் பத்திரிகையான ‘ La Provence’ வெளியிட்டிருக்கிறது.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *