Breaking News
Home / கட்டுரைகள் / உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.!

உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.!

பாகம் 1

கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல் சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும் உயிர்சார்ந்தவை.

மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறேனோ அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.

அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு.

என்னவாக இருக்கிறோமா, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை அவன் விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும். கலையும் இலக்கியமும் ஆன்மாவின் பலம், அறிவின் பலம். கலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவனின் கூறுவதைபோல அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.

« கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள் கலை இலக்கியவாதிகள். தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு.

எனவேதான் ஒரு நாட்டைக் குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கின்றபோது இலக்கியமென்கிற எடைக் கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.

பிரெஞ்சு தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது, பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி இருந்தும், உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.

பிரான்ஸ் நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்ஸ நாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக முடியாமல் தொடரும் மொழி. உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம் பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம் இன்று உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சு பயன்பாட்டில் உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.

•••பிரான்சு நாட்டின் தனித்தன்மை•••

மொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும் இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில் உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்துதல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் வலுவான பல காரணங்கள் உள்ளன.

நூற்றாண்டுகளைக் கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம் ; அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறை ; கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம், மக்கள் ; தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என அவற்றை வரிசைப்படுத்த முடியும்.

அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவேண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மூல்ஸ்ஃபெரி சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு அதனை ஓர் தார்மீகக் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.

இயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள் கலை இலக்கியத்திலும் அம்மாதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசையென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள் படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துளது என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கின்றவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர்.

பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப் பொறுப்பேற்பவர்கள் அவரவர் காலத்திற்கும், சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பரியபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நிறைய இடங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவான பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை. இடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழி வந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல், தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர் வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும் இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள்வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் இத்தொடரின் நோக்கம்.

தொடரும் ….


நாகரத்தினம் கிருஷ்ணா.

Check Also

காதலையும் வீரத்தையும் சுவைபடக் கூறும் இலக்கியங்கள் – இடைக்காலம்.

பாகம் 3 ரொமான் (le roman) : புதினத்தை பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *