Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / நான் எப்போதும் என்னை விதியின் கைகளில் ஒப்படைத்திருப்பவன்-பிரான்ஸ் அதிபர்.

நான் எப்போதும் என்னை விதியின் கைகளில் ஒப்படைத்திருப்பவன்-பிரான்ஸ் அதிபர்.

கொரேனா வைரஸ் உலகமயமாதல் சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று சாதாரணமாக அனைவரும் உணர்கின்றனர். அதனைக் கட்டிக்காக்க முற்பட்ட உலகத் தலைவர்கள் கூட தற்போது இதே கருத்தை உரைக்கத்தொடங்கி விட்டார்கள்.

வைரஸ் நெருக்கடி உலகமயமாதலின் தன்மையை மாற்றும் என்று பிரான்ஸின் அரசுத் தலைவர் மக்ரோன் பைனான்சியல் ரைம்ஸுக்கு( Financial Times) அளித்த நீண்ட பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.அந்த செவ்வியில் அவர், சீனா ஆரம்பத்தில் வைரஸ் நெருக்கடியை கையாண்ட விதம் குறித்து சந்தேகப்படும் வகையில் கருத்துரைத்திருக்கிறார். சீனாவின் நடவடிக்கைகளில் தெளிவற்ற பகுதிகள் (Gray areas) தென்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேற்கு நாடுகள் இந்த நெருக்கடியைக் கையாளும் விதம் குறித்து விமர்சித்து – குறிப்பாக பிரான்ஸின் மூதாளர் இல்லங்களைக் குறிப்பிட்டு – சீன ராஜதந்திரி ஒருவர் தெரிவித்த கருத்துக்காக சீனத் தூதரை அழைத்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தனது ஆட்சேபத்தை தெரிவித்திருக்கும் பின்னணியில் மக்ரோனின் இந்த செவ்வி வெளியாகி இருக்கிறது.

Financial Times செவ்வியில் மக்ரோன் தெரிவித்திருக்கும் முக்கிய விடயங்களின் ஒருபகுதி வருமாறு; தற்போதைய நிகழ்வு மனித குலத்தின் இருப்பில் நிகழ்ந்த ஒரு சரிவு, இந்த நெருக்கடி உலக மயமாதலின் தன்மையையும் சர்வதேச முதலாளித்துவக் கட்டமைப்பையும் மாற்றும். நாம் நெருக்கடியின் ஆரம்பத்தில் இருக்கின்றோமா அல்லது மத்தியில் நிற்கின்றோமா என்பதை அறியேன். யாருக்குமே அது தெரியாது, உயிர்களைப் பாதுகாப்பதற்காக உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரை வீடுகளுக்குள் முடக்கியிருக்கிறோம். இதற்கு எங்கள் வரலாற்றில் எந்த முன்னுதாரணங்களும் இல்லை. இந்த உலகளாவிய நெருக்கடியின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே இப்போது கூறமுடியாது. “நான் எப்போதும் என்னை விதியின் கைகளில் ஒப்படைத்திருப்பவன். முன்கூட்டியே எதனையும் கற்பனை செய்வது கிடையாது. நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும் முயற்சிக்கும் திறனைக் கொண்டிருப்பதால் நான் ஆதரிக்கின்ற, எதிர்க்கின்ற விடயங்கள் அனைத்தையுமே என்னால் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது என்று தெரிவித்திருக்கிறார் மக்ரோன். இந்த நெருக்கடிக்குள் இருந்து ஜரோப்பிய ஒன்றியத்தை மீட்கவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் திட்டங்கள் தேவை என்றும் அவர் இந்தப் பேட்டியில் பல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

16-04 2020

நன்றி: ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *