Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சின் சுதந்திர தினம் ஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து பிரகடனப்படுத்தப்படலாம்.

பிரான்சின் சுதந்திர தினம் ஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து பிரகடனப்படுத்தப்படலாம்.

இம் முறைஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து சுகாதாரப் போரில் முன்னரங்கில் நின்று சமராடிய மருத்துவர்கள், பணியாளர்களை துதிக்கும் ஓர் நாளாக பிரான்ஸின் சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்படலாம்.

அரசுத் தலைமை இத்தகைய ஓர் எண்ணத்தைக் கொண்டிருப்பதாக எலிஸே மாளிகையில் இருந்து கசியும் தகவல்களை ஆதாரம் காட்டி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.சுதந்திர தினத்தை, உள்ளிருப்புக் காலம் முடிவுக்கு வருவதைக் குறிக்கும் ஓர் கூட்டுமன உணர்வு மிக்க நாளாக ஏற்பாடு செய்யும் எண்ணம் அதிபர் மக்ரோனின் அடிமனதில் இருக்கிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெரும் தொற்று நோய் அனர்த்தத்தால் நாடு மூடி முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் தவம் கிடக்கிறார்கள். நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவரும் நகர்வுகளை மே 11 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளது. எனினும் மக்கள் திரளும் நிகழ்வுகளை நடத்த ஜூலை நடுப்பகுதி வரை அனுமதி இல்லை என்று அரசுத் தலைவர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வரவிருக்கும் ஜூலை 14 ஆம் திகதி நாட்டின் சுதந்திர தினம் வழமை போல் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சுகாதார நிலைமைகள் மேலும் சீரடைய வேண்டும். தொற்றின் வேகம் தற்போது குறைந்தாலும் மறுபடியும் ஒர் அலையாக அது மீண்டும் தாக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நாடுகளை எச்சரிக்கிறது. எனினும் – ஒருவேளை எதிர்பாராத விதமாக நிலைமை விரைவாக சீரடைந்தால், நாடு பெரும் நெருக்கடிக்குள் இருந்து மீண்டு மக்கள் வீடுகளை விட்டு விடுதலையானதைக் குறிக்கும் ஒரு நாளாக சுதந்திர தினத்தை கொண்டாட அரசுத் தலைமை விருப்பம் கொண்டுள்ளது.

தொற்று நோயில் மடிந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் நெருக்கடி காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய நாட்டின் மருத்துவர்களையும் சுகாதாரப் பணியாளர்களையும் ஏனைய அத்தியாவசிய சேவையாளர்களையும் நினைவு கூர்ந்து அவர்களைக் கௌரவிக்கும் விதத்தில் சுதந்திர நாளை ஏற்பாடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுபற்றிய யோசனைகளை பலர் அரசிடம் தெரிவித்து வருகின்றனர் எனச் செய்தி வெளியாகி உள்ளது.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *