Breaking News
Home / உலகம் / அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் உலகின் தலைப்புச் செய்திகளில்..!

அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் உலகின் தலைப்புச் செய்திகளில்..!

அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் (எறும்பு தின்னிகள்) உலகின் தலைப்புச் செய்திகளில் அடிபடத்தொடங்கி உள்ளன. ஊர்வனவாக அறியப்படும் இந்த உயிரினம் உண்மையிலேயே ஒரு பாலூட்டி. இதன் குட்டிகள் பால்குடி மறக்கும்வரை தாயின் முதுகிலேயே சவாரி செய்கின்றன.

தன் உடல் முழுவதும் செதில்களைக் கொண்ட ஒரே பாலூட்டி விலங்கினம் பன்கோலின் மட்டுமே ஆகும். அவற்றின் செதில்களுக்கு கறுப்புச் சந்தைகளில் மவுசு அதிகம். செதில்களுக்காகவே வகை தொகை இன்றி வேட்டையாடப்பட்டு உலகெங்கும் கடத்தி விற்கப்படுகின்றன. முற்றாக அழியும் ஆபத்தில் உள்ளன.

சீனாவிலும் வேறு பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் எட்டு வகையான பன்கோலின்கள் வாழ்கின்றன. நான் அறிந்தவரை தமிழர் தாயகப் பகுதிகளில் இவற்றைக் கண்டதாகத் தகவல் இல்லை.

இவற்றின் செதில்கள் பாரம்பரிய சீன மருத்துவத்துக்குப் பயன்படுவதால் உலகெங்கும் இவற்றுக்கு கிராக்கி அதிகம். இவற்றின் தோல்களில் இருந்து சப்பாத்துகள், கைப்பை போன்ற ஆடம்பரப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

இப்போது கொரோனா பரப்புவதாக இந்த அப்பாவிகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வைரஸ் விவகாரத்தில் வெளவால்களுக்கும் மனிதருக்கும் இடையே இதுகள்தான் ‘இடைத்தரகர் ‘ என்கிறது விஞ்ஞான உலகம்.

சீனாவின் வுஹான் (Wuhan) சந்தையில் சூப்புக்காக வெட்டி இரத்தம் சொட்டச்சொட்ட வைத்திருந்த பன்கோலின் இறைச்சியில் இருந்தே வைரஸ் முதலில் பரவியதாகச் சொல்லுகிறார்கள்.வெளவால்களில் இருந்து பன்கோலின்களுக்குப் பரவி பின்னர் அது மனிதர்களுக்குத் தொற்றியது என்பதே இப்போதுவரை கூறப்படும் விளக்கம். ஆனால் உண்மையில் வைரஸின் மூலம் எது என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கிடையில் இந்த அப்பாவிகளை கொடிய கிருமிகளைக் கடத்தும் தீவிரவாதிகளைப்போலப் பார்க்கத் தொடங்கி விட்டது உலகம்.

சமீப நாட்களாக பன்கோலின்கள் துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

வுஹான் சந்தையில் இருந்து கூப்பிடு தொலைவில்தான் சீனாவின் வைரஸ் சோதனைக் கூடம் (virology experiments Lab) அமைந்திருக்கிறது. பாதுகாப்புக் குறைபாடுகளால் அங்கிருந்து தப்பிய ஒரு ‘குட்டிக் கிருமி’ காட்டு விலங்குகளை விற்கும் சந்தைக்குள் வந்து ஏன் ஒளிந்திருக்கக் கூடாது?

இப்படி ஒரு வலுவான கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர்.

பரவத் தொடங்கிய நாட்டில் சாவு எண்ணிக்கை ஆக மூவாயிரம் தான். அமெரிக்காவோ நாளோன்றுக்கு ஆயிரங்கள் என்ற கணக்கில் மரணங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.
இதனால் கடுப்பாகியுள்ள ட்ரம்ப் சீனாவை சீண்டிக் கொண்டிருக்கிறார்.

Wuhan சந்தைதான் வைரஸின் தொடக்கம் என்பது சீனாவின் கட்டுக்கதை என்று மேற்குலக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அருகே உள்ள ஆய்வுக்கூடத்தில் தவறுதலாக வெளியேறிய கிருமி அங்கிருந்து மனிதர்களுக்கு மனிதர்கள் வழியே நேரடியாகத்தொற்றிப் பரவியிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

வுஹான் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் பரவியதா என்பதை கண்டறிய அமெரிக்கா முயற்சி எடுத்துவரு கிறது என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

“நாளாந்தம் பல கதைகளைக் கேள்விப்படுகிறோம். அவை பற்றி எல்லாம் விரிவான விசாரணைகளை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விடயத்தில் தனக்குத் தெரிந்த உண்மையை சீனா மறைக்காமல் வெளிப்படுத்தி “தெளிவுக்கு வரவேண்டும்” என்கிறார் ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ.

கொரோனா வைரஸ் இயற்கையானது என்பதே அமெரிக்கப் புலனாய்வு சேவைகளின் தீர்மானம். ஆனாலும் எதுவும் நிச்சயம் இல்லை என்று கூறியிருக்கிறார் அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளகர்த்தர் ஜெனரல் மார்க் மில்லே(General Mark Milley).

சீனாவின் சோதனைக் கூடத்தில் இருந்து கிருமி பரவியதற்கான சான்றுகள் இருப்பதை சில தரப்புகள் உறுதிப்படுத்தி உள்ளன என்று அமெரிக்காவின் Fox News தெரிவிக்கிறது.

அங்கு நடத்தப்படும் பரிசோதனைகள் உயிரியல் ஆயுத நோக்கம் கொண்டவை யாக (bio weapon) இல்லாமல், வைரஸ்களை இனங்காண்பதிலும் அவற்றை எதிர்ப்பதிலும் அமெரிக்காவோடு தனது வலுவை மதிப்பிட சீனா எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று Fox News செய்தி சொல்கிறது.

கொரோனா நெருக்கடியை சீனா ஆரம்பத்தில் கையாண்ட விதம் குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், “நாம் அறியாத பல விடயங்கள் அங்கு நடந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போன்ற கருத்தை பிரிட்டிஷ் அரசும் வெளிப்படுத்தி உள்ளது. ” கடுமையான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று அது சீனாவை எச்சரித்திருக்கிறது.

சீனா மீதான ஐயங்களும் கண்டனங்களும் அதிகரித்து வருவதால் உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் பரவல் பின்னணி என்ன என்பது பெரும் மர்மமாக மாறியுள்ளது.

இவ்வாறான புதிய தகவல்களுடன் பூகோள வர்த்தகம் சார்ந்த புதிய அரசியல் மோதலாக மாறிவருகின்ற வைரஸ் விவகாரத்தின் இடைநடுவில் ஏதும் அறியா வன விலங்குகள் அகப்பட்டு அவலப்படுவதுதான் பெரும் சோகம்.

தற்போதைய கொரோனா வைரஸ் கிருமியின் ரிஷிமூலம் கண்டறியப்படும் வரை, தங்கள் பக்கம் குரல் கொடுக்க யாருமற்ற நிலையில் வதைபடும் சக உயிரினங்களின் குரலாக ஒலிப்போம்.

படம் :குட்டியைச் சுமந்து செல்லும் பன்கோலின்.(Pangolin)

18-04 2020.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *