Breaking News
Home / உலகம் / இந்தியாவில் நச்சு வாயு கசிந்ததில் ஆயிரக் கணக்கில் மக்கள் பாதிப்பு.

இந்தியாவில் நச்சு வாயு கசிந்ததில் ஆயிரக் கணக்கில் மக்கள் பாதிப்பு.

இந்தியாவில் தென்கொரியாவின் பிளாஸ்ரிக் காப்பரேட் கம்பெனியின் தொழிற்சாலை ஒன்றிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விலங்குகள் அழிந்திருக்கின்றன. சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி .காப்பரேட்(LG Corp) தொழிற்சாலையிலேயே இந்த விபத்து நேர்ந்திருக்கிறது.

இந்தியச் சந்தையில் பிளாஸ்டிக் உற்பத்திகளில் செல்வாக்குச் செலுத்தும் இந்தக் கம்பெனியின் தொழில் மையத்தில் இருந்து பிளாஸ்ரிக் மற்றும் இறபர் தயாரிப்புக்கு பயன்படுத்தும்
Styrene வாயு கசிந்து அடர்த்தியாகப் பரவியிருக்கிறது. இதனை சுவாசித்தவர்கள் உடனடியாகவே மயங்கியுள்ளனர்.

இன்று விடிகாலை பிரதேச மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் நச்சு வாயு கசிந்து நெடுந்தூரம் பரவியதால் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

சுவாசித்த சில நிமிடங்களில் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய Styrene வாயு சுமார் 3 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் பரவியிருப்பதாக ஆரம்ப அவதானிப்புகளில் தெரியவந்துள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில் வாயு பரவத் தொடங்கியதும் மூச்சுவிடமுடியாது பலரும் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் ஓடுகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

இது வரை எட்டுப் பேர் வரை உயிரிழந்துள்ளனர் நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் மயக்கமுற்ற நிலையில் வீடுகளுக்குள் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடுமையான உள்ளிருப்புக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழலில் நூற்றுக்கணக்கானவர்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப் பட்டிருப்பது அங்கு பெரும் பீதியையும் சுகாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பொது முடக்கம் காரணமாக 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை சில தினங்களுக்கு முன்னரே மீளத் திறக்கப்பட்டது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 36 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மிக மோசமான விசவாயுக் கசிவின் நினைவுகளை மீட்டுள்ள இன்றைய சம்பவத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் விவரங்கள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை.

1984 இல் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இரசாயனத் தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு பரவிய மிக மோசமான விபத்தில் சுமார் 4ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 5 லட்சம் பேர் கடும் பாதிப்புகளுக்குள்ளாகினர்.

நன்றி :ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *